கட்டுவன் கரண்டகுளம் ஐயனார் ஆலயம்

புகழ் பூத்த கட்டுவன் தன் நான்கு திசைகளிலும் காவல் தெய்வங்களாகிய ஐயனார், வைரவர், காளி அம்மன், வீரபத்திரர் போன்ற தெய்வங்களுக்குரிய ஆலயங்களை கொண்டு விளங்கிய புழம்பெரும் கிராமமாகும். இக்கிராமத்தின் மேற்றிசையில் கரண்டக்குளப்பதியில் பூரணை, புஷ்கலை சமேத ஐயனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகவும் தொன்மையானதும் ஆல், வேம்பு, மருது, மற்றும் அரச மரம் போன்ற நிழல் தரும் உயர்ந்த மரங்கள் நிறைந்ததும் ஆகும்.

மதிய நேர, சூரிய ஒளி உட்செல்லாதபடி தடுத்து நின்றதால் இவ்வாலயச் சூழல் இன்றும் மக்கள் மனதைக் கவரும் தெய்வீகம் பொருந்திய இடமாக விளங்குகின்றது. ஆதி காலத்தில் இவ்வாலயத்தில் ஆலமரங்கள் நெருக்கமாக அமைந்திருந்த பகுதியில் ஒரு அரசமரம் ஓங்கி வளர்ந்திருந்தமையால் அதனை தெய்வீக அம்சமாகக் கருதி ஒரு கல்லை நிலைப்படுத்தி, அருவுருவ, மரபுவழி வழிபாடுகள் இடம்பெற்றதாக அறியக்கிடக்கின்றது. ஊர் மக்கள் பொங்கலிட்டு மடைபரவி, ஐயனாரை வழிபட்டனர். இத்திருப்பதியின் காலத்தை நிர்ணயம் செய்ய எதுவித சாசனங்களும் கிடைத்ததில்லை, எனினும் இக்கோவிலின் திருமஞ்சனக் கிணற்றின் அமைப்பும் தோற்றமும் இக்கோவிலின் பழமையை பறைசாற்றுகின்றன.

இற்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றிய வசந்தன் நாடகம் பாடலில்

“தண்டமிழ் சேர் கரண்டைப் பதிவாழ் தூயன் பெரும்படை அய்யன்”

என ஐயனாரைப் போற்றும் வரிகளினால் 250 ஆண்டுகளுக்கு முன்னரே ஆலயமாக உருப்பெற்றமை தெளிவாகின்றது.

இவ்வாலயத்தின் திருப்பணிகள் ஐயனின் அடியார்கள் மூலம் காலத்துக்கு காலம் நிலைவேற்பட்டு விரிவுபடுத்தப்பட்டு விதிப்படி நெறிப்பட்ட ஆலயமாக விளங்கியமையை கட்டுவன் மக்களின் செவிவழிச் செய்திகள் மூலம் தெரியவருகின்றது. இவ்வாலயத்தின் ஆரம்பகால அர்ச்சகராக விளங்கிய ஏரம்பு அவர்களின் காலத்திலிருந்தே வருடாந்த உற்சவம், கந்தபுராணப்படனம், மற்றும் நைமித்திய நித்திய கிரியைகளும் ஆகம விதிப்படி சிறப்பாக நடைபெற்று வந்தன.

ஏரம்பு ஜயாவின் பின்னர் பூசகராக விளங்கியவர் க. சிவபாதசுந்தரக் குருக்கள் (கணேசையர்) அவர்கள். அவரது காலத்தில் ஆலயம் புனரமைப்புச் செய்யப்பட்டு 1983ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பெற்று புதுப்பொலிவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக மக்களின் இடப்பெயர்வின் பின் 1999ஆம் ஆண்டு பிற்பகுதியில் கட்டுவன் மேற்குப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மக்களின் மீள்குடியேற்றம் செய்ய இராணுவ அனுமதி கிடைத்தமை ஐயனார் திருக்கோவில் அமைந்த புண்ணிய பூமியாகும். ஐயனாரை குலதெய்வமாக கொண்டு வழிபட்ட அன்பர்கள் சிலருடன் சேர்ந்து அமரர் அருணாசலக் குருக்கள் எடுத்த முயற்சியினால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் இடம் பெற்றுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பரிபாலன சபையினர், அமரர் சிவபாதக் குருக்கள், அமரர் அருணாசல குருக்கள் மற்றும் அவரது புதல்வர்களின் அர்ப்பணிப்பு மிகவும் அளப்பரியது.

இத்திருக்கோவிலில் நிறைவு செய்யப்பட வேண்டிய திருப்பணிகள் பல உள்ளன. இவற்றை உரிய முறையில் செய்வதற்கு எமது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகவும் தொன்மையான சிறப்புமிக்க ஐயனார் திருக்கோயிலை உரிய முறையில் பேண உதவுமாறு 2025ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட புதிய பரிபாலன சபை பணிவுடன் வேண்டுகிறது.

“நிதி படைத்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்”
“கொடுப்பார் தாம் அறிவர் தம் கொடையின் சீர்”

ஐயனின் திருவருள் பிரகாரம் அனைவருக்கும் கிடைப்பதாக.

நன்றி

கட்டுவன் கரண்டகுளப்பதி அய்யனார் பரிபாலன சபை